ஒரு காட்சி…
பொருளாதார பெருமந்தம் சர்வதேசத்தையே முடக்கிப் போட்டிருந்த 1930கள்… பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப்பிடி என்றாகிவிடும். ரொட்டி என்பது மிகக் காஸ்ட்லியான உணவு ஏழை மக்களுக்கு.
அந்த சூழலில், எவ்வளவு வேலைச்சுமையாக இருந்தாலும் அதை செய்தே தீர வேண்டிய கட்டாயம் தொழிலாளர்களுக்கு.
இன்னொரு பக்கம் வேலைப்பகுப்பு முறையின் கொடுமை. வேலைப் பகுப்பு முறை என்பது, "ஒருவருக்கு எந்த வேலை சரியாகச் செய்ய வருகிறதோ அதை மட்டுமே தொடர்ந்து செய்வது.." உதாரணம், திருகாணியின் மரையைத் திருகுவதுதான் ஒருவருக்கு சரியாக வரும் என்றால், தொடர்ந்து அதே வேலையைச் செய்வது..
இந்த சமூக அவலங்களை, அவை நடக்கும் காலகட்டத்திலேயே ஒரு சினிமா மூலம் நச்சென்று சொல்ல வேண்டும். ஆனால் டாக்குமெண்டரி மாதிரி சொல்லிக் கொண்டிருந்தால் யார் பார்ப்பார்கள்…
ஆனால பார்க்க வைத்தார் ஒருவர்… அவர்தான் சார்லி சாப்ளின்..
படம்: மாடர்ன் டைம்ஸ்!
உலகின் மிகச் சிறந்த புரட்சிகரமான படம் என்று கூட இதைச் சொல்லலாம்.
வசனங்கள் இல்லை, அதிரடி சண்டை, கிராபிக்ஸ், அட குறைந்த பட்சம் ரொமான்ஸ் கூட கிடையாது. ஆனால் பார்ப்போரின் இதயங்களை வசப்படுத்தும் நையாண்டி, உணர்வுகள், அரசியல் எள்ளல் என புதிய கலவையாக இருந்தது அந்தப்படம்.
குறிப்பாக, நேரத்தை மிச்சப்படுத்த சாப்பாடு ஊட்டிவிடும் ஒரு கருவியைக் கண்டுபிடிப்பதாக வரும் காட்சி… எள்ளலின் உச்சம்!
மாநிலக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் திரையில் நான் பார்த்த முதல் சாப்ளின் படம் இதுதான். அதன் பிறகு இந்தப் படத்தை எத்தனையோ முறைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக அந்த முதல் 20 நிமிட தொழிற்சாலை காட்சிகளைப் பார்க்க வேண்டும் என டிவிடியில் ஓடவிட்டால், என்னையும் அறியாமல், படம் முடியும் வரை அதிலேயே லயித்துவிடுவது, இந்தப் பதிவை எழுதும் வரை தொடர்கிறது!
சாப்ளின் – சில குறிப்புகள்
சார்லி சாப்ளின் என்ற திரைக்கலை மேதை மீது விவரம் தெரிந்த நாள் முதல் நேசம் கலந்த மரியாதை உண்டு. கலைவாணர், புரட்சித் தலைவர் படங்களை விரும்பிப் பார்ப்பது போலவே, சார்லி சாப்ளினின் படங்கள் எங்கே ஓடினாலும் தேடிப் போய் பார்த்துவிடுவேன்.
அந்த அற்புத கலைஞனைப் பற்றி சில வரிகளுக்குள் சொல்வது சாத்தியமான விஷயமே அல்ல…
எல்லோரும் சினிமாவை எப்படி தங்களை முன்னிலைப்படுத்த மட்டுமே கையாளலாம் என யோசித்துக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில், சாப்ளின் மட்டுமே சினிமாவை சமூக விழிப்புணர்வுக்கான கருவியாக மாற்றினார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்குப் பகுதியில் ஒரு ஏழை மேடைப் பாடகனின் மகனாக 1889-ல் பிறந்தவர் சாப்ளின். 5 வயதிலேயே நாடக மேடைகளுக்கு அவர் நன்கு அறிமுகமாகிவிட்டார். தான் பெற்ற அனுபவங்களைத்தான் பின்னாளில் திரைப்படங்களில் வெகு யதார்த்தமாகக் காட்டினார்.
பெரிதாக படிப்பறிவில்லை. 21 வயது வரை வறுமையுடன் போராடிய அந்த கலைஞன், பின்னர் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டார். 1913-ல் ஊமைப் படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். அவர் ஆரம்பத்தில் போட்டது வில்லன் வேஷம். வில்லனாக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்வது சாப்ளின் காலத்திலிருந்தே தொடர்கிறது போலும்!
இரண்டாவது படத்திலேயே காமெடியை தனது பிரதான அஸ்கிரமாக்கிக் கொண்டார். 'கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ்' என்ற அந்தப் படத்தில்தான் தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத்தொப்பி, கையில் சிறு தடி என தனது ட்ரேட் மார்க் வேடத்துக்கு மாறினார்.
அதன்பிறகு ஒரே ஆண்டில் 35 படங்களில் நடிக்கும் சூப்பர் நடிகராக மாறிவிட்டார் சாப்ளின். இவை அனைத்துமே கிட்டத்தட்ட வெற்றிப் படங்கள்தான். 1916 ம் ஆண்டில் சாப்ளின் வாங்கிய சம்பளம் வாரம் 10000 டாலர்கள்!
இன்னொன்று அன்றைக்கே, குறும்படம், இரண்டு ரீல் சினிமா என பெரிய திரைப் புரட்சியே நடத்திக் காட்டியவர் சாப்ளின்.
நடிகராக இருந்தவர் பின்னர் இயக்குநராகவும் உயர்ந்தார்.
1919-ல் யுனைட்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார், நண்பர்களுடன் இணைந்து. இந்த பேனரில் வெளிவந்த படம்தான் சிட்டி லைட்ஸ் (1931).
மௌனப் படங்களுக்கு மவுசு குறைந்து, பேசும் படங்கள் வரத் தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் (1936) இந்த மாடர்ன் டைம்ஸ் வெளியானது. இப்படத்தில் மற்றவர்கள் பேசினாலும், சாப்ளின் பேசவே மாட்டார். ஆனால் சரித்திரத்தில் பேச வைத்தார் அந்தப் படத்தை.
சாப்ளின் சாதனைகளுக்கு சிகரம் என்றால், சர்வாதிகாரி ஹிட்லரைக் கிண்டலடித்து அவர் தயாரித்து இயக்கி 1940 ம் ஆண்டு வெளியான 'தி கிரேட் டிக்டேட்டர்'. இந்தப் படத்தில்தான் முதல்முதலில் அவர் வசனம் பேசினார்.
ஹிட்லர் சர்வ பலம் மிக்க சர்வாதிகாரியாக கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வெளியான படம் இது என்பதிலிருந்தே, சாப்ளின் என்ற கலைஞனின் ஆளுமை என்ன என்பது புரிந்திருக்கும்.
உலகம் முழுவதும் இப்படம் திரையிடப்பட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 1952 ல் அவர் "லைம் லைட்" என்ற படத்தில், சீரியசான வேடத்தில் நடித்தார்.
அவரது கடைசி படம் A Countess from Honk Kong (1967). நடித்தவர்கள் மார்லன் பிராண்டோ – சோபியா லாரன். இந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றுவார் சாப்ளின். அதுதான் அவரது கடைசி திரைத் தோற்றமும் கூட.
பின்னர் தனது பழைய படங்களுக்கு புத்தம் புதிதாய் இசைச் சேர்த்து மறுவெளியீடாகக் கொண்டுவந்தார். அப்போதும் அவை பெரும் வெற்றி பெற்றன.
சாப்ளின் மிகச் சிறந்த இசையமைப்பாளர். லைம்லைட் (1952) படத்தின் ஒரிஜினல் ஸ்கோருக்காக சார்லி சாப்ளினுக்கு ஆஸ்கர் தரப்பட்டது.
இது தவிர 1929 மற்றும் 1972 ம் ஆண்டுகளில் அவருக்கு கவரவ ஆஸ்கர் விருது தரப்பட்டது.
ஆனாலும் உள்ளுக்குள் அவரது ஏக்கம், தனது படங்கள் மூலம், தனது நடிப்புக்காக அந்த ஆஸ்கர் கிடைக்கவில்லையே என்று. அதுவே பல தருணங்களில் ஆஸ்கர் கமிட்டி மீதான கிண்டலான விமர்சனமாகவும் அவரிடமிருந்து வெளிப்பட்டுள்ளது.
'கம்யூனிஸ்ட்' சாப்ளின்…
உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்ற சிட்டி லைட்ஸ், கிரேட் டிக்ட்டர் போன்றவை ஒரு ஆஸ்கர் விருதுக்குக் கூடப் பரிந்துரைக்கப்படவில்லை. காரணம், அவரது அரசியல் நிலைப்பாடுகள் என்கிறது சரித்திரம். இருந்தாலும் பிரிட்டிஷ் அரசு அவருக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
சாப்ளின் முழுக்க முழுக்க கம்யூனிஸ சித்தாந்தத்தின் ஆதரவாளர். மேற்கத்திய நாடுகள் அவரை ஒரு கம்யூனிஸ்டாரகவே பார்த்தனர். தனது படங்கள் பெரும்பாலானவற்றில் கம்யூனிஸக் கருத்துக்களை போகிறபோக்கில் நச்சென்று சொல்லிவிட்டுப் போயிருப்பார் சாப்ளின்.
சொந்த வாழ்க்கையில் அவருக்கு நிறைய சோகங்கள் இருந்தாலும், 1977-ல் ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது இறுதி மூச்சு அடங்கும் வரையிலும் மக்களைச் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் பெரும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருந்த ஒப்பற்ற கலைஞன் அவர்.
ஒரு கலைஞன் எப்படிப்பட்ட படைப்புகளை மக்களுக்குத் தரவேண்டும் என்று பாடம் எடுத்த ஆசானும் கூட!
இவருடைய படங்களை YouTube இல் சென்று பாருங்கள்...
அன்புடன்
உங்கள்
மாறன்....
0 comments:
Post a Comment
மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...