Sep 23, 2010

உங்கள் கம்ப்யூட்டர் உண்மையாக வேலை செய்கிறதா!.....

இதென்ன கேள்வி? நம் கம்ப்யூட்டரை நாம் நம்பாமல் யார் நம்புவது என்று எண்ணுகிறீர்களா? மேலே படியுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு வேலையும் மேற்கொள்ளாமல், லாக் இன் செய்துவிட்டு பேசாமல் வேறு ஒரு புத்தகத்தினைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது என்ன நினைக்கிறீர்கள்? கம்ப்யூட்டரில் ஒன்றுமே நடக்கவில்லை என்றுதானே? உங்கள் சி.பி.யு.வின் செயல் நடவடிக்கைகளைக் காட்டும் சிறிய விளக்கு ஒன்று இருக்குமே, அதைப் பாருங்கள். அவ்வப்போது பளிச்சிட்டுக் கொண்டு இருக்கும். அப்படியானால் என்ன பொருள்? 

அது ஏதோ வேலையில் ஈடுபடுகிறது என்றுதானே!
ஆம், நீங்கள் கம்ப்யூட்டரில் ஒன்றுமே வேலை செய்திடாமல் இருக்கையில், சிபியு சும்மா இருப்பதில்லை. அது ஏதேனும் சில வேலைகளில் ஈடுபடுகிறது. அது என்ன என்று அறிய வேண்டுமா?
விண்டோஸ் சிஸ்டம் இயக்கம் என்பது மிக எளிமையான ஒன்று இல்லை. நீங்கள் எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷனையும் இயக்காத போது, அது வேறு சில செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளது.
உங்கள் ஹார்ட் ட்ரைவினை எது அணுகுகிறது? உங்கள் சிபியு அதற்கு என்ன பதில் கொடுக்கிறது? என்பதனை நாம் சோதனை செய்து பார்க்க வேண்டும். அப்போதுதான், ஏதேனும் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் நடைபெறுகிறதா? நம் பெர்சனல் தகவல்கள் ஒதுக்கப்பட்டு, வேறு ஒரு இடத்திற்கு அனுப்பப்படுவதற்கு சேமித்து வைக்கப்படுகிறதா என்பதெல்லாம் தெரியும்.

இந்தக் கோணத்துடன், இன்டர்நெட் தளங்களைப் பார்வையிட்ட போது எனக்கு கிடைத்தது ஓர் அருமையான புரோகிராம். அதன் பெயர் What's My Computer doing? கிடைத்த தளத்தின் முகவரி http://www.itsth.com/en/produkte/Whatsmycomputerdoing.php இந்த தளத்தில் இருந்து இந்த புரோகிராமினை இலவசமாக டவுண்லோட் (480 கேபி) செய்து கொள்ளலாம். இதனை இயக்கத் தொடங்கியவுடன், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கை எந்த புரோகிராம்கள் அணுகுகின்றன என்பதையும், அவை சிபியுவில் என்ன வேலைகளை மேற்கொள்கின்றன என்பதையும் காட்டும்.

இந்த புரோகிராமில், உங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் செயலை அப்படியே நிறுத்தி வைத்துக் காட்டும் பட்டன் (Freeze) ஒன்று தரப்பட்டுள்ளது. சந்தேகப்படும் எந்த புரோகிராமின் இயக்கத்தினையும், இந்த பட்டனை அழுத்தி நிறுத்தி, அதன் இயக்கம் குறித்த அனைத்து தகவல்களையும் பெறலாம். புரோகிராம் எந்த ட்ரைவிலிருந்து இயங்குகிறது, அந்த எக்ஸிகியூடபிள் பைலின் தேதி, கம்ப்யூட்டரில் பதிந்த தேதி, பைல் சிக்னேச்சர் எனப்படும் அதன் அடையாளக் குறியீடு,பிரச்னைகள், பைலின் பதிப்பு எண் ஆகியவற்றைக் காணலாம். இந்த பட்டன் போக மேலும் இரு பட்டன்கள் உள்ளன. இவற்றின் மூலம், நாம் சந்தேகப்பட்டு பார்க்கும் அந்த புரோகிராமின் ப்ராப்பர்ட்டீஸ் பார்க்கலாம். புரோகிராம் இருக்கும் அந்த போல்டரைத் திறந்து கவனிக்கலாம். புரோகிராமினை மூடலாம் (ஒரு சில கம்ப்யூட்டரில் இது மட்டும் இயலவில்லை; காரணம் தெரியவில்லை). கம்ப்யூட்டரிலிருந்து நீக்கலாம். அல்லது இந்த புரோகிராமில் வைரஸ் உள்ளதா என வைரஸ் டோட்டல் போன்ற ஆன்லைன் புரோகிராம்கள் மூலம் செக் செய்திடலாம்.

இருப்பினும் ஒரு சில வைரஸ் புரோகிராம்கள், இதிலும் சிக்காமல் தங்கள் வேலைகளை மேற்கொள்ளலாம். ஆனால் அது எப்போதாவது தான் நடக்கும். எனவே உங்கள் கம்ப்யூட்டரில், உங்களுக்குத் தெரியாமல், ஏதேனும் புரோகிராம்கள் இயங்குவதாக நீங்கள் சந்தேகப்பட்டால், உடனே இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்க்கவும். விண்டோஸ் 7 உட்பட அனைத்து புரோகிராம்களிலும் இது இயங்கும்.

அன்புடன்
உங்கள்
மாறன்...

Sep 22, 2010

இந்தப் பகல் கொள்ளைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்!....


இந்தப் பகல் கொள்ளைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்!
திரைப்படத் தொழில் நசிந்துவிட்டது, திருட்டு டிவிடி பெருகிவிட்டது என்றெல்லாம் சினிமாக்காரர்கள் ஒருபக்கம் கூவுகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் மூலகாரணமான திரையரங்குகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்றால் மட்டும் ஒருவரும் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.
ஒரு படம் குறித்த இமேஜை மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைப்பதில் முக்கியப் பங்கு திரையரங்குகளுக்கே உண்டு. பெரிய படங்கள் வெளியாகும்போது ரசிகர்களைக் கட்டுப் படுத்துகிறோம் என்ற பெயரில் பெரிய கம்பெடுத்துக் கொண்டு தாறுமாறாக அடிக்கும் திரையரங்க ஊழியர்களை போலீசார் உள்பட யாருமே கண்டு கொள்வதில்லை.
முக்கிய படங்களுக்கு கவுண்டரிலேயே எக்கச்சக்க விலைக்கு டிக்கெட்டுகளை விற்பது, அல்லது சைக்கிள் ஸ்டாண்ட் பையன்களிடம் மொத்த டிக்கெட்டையும் கொடுத்து கறுப்பு விலைக்கு விற்க வைப்பது போன்றவை இன்றும் தொடர்கின்றன. அரசு இதைக் கண்டு கொள்வதே இல்லை.
நியாயமான கட்டணம், திரையரங்குகளில் திண்பண்டங்களை நியாயமான விலைக்கு விற்பது, சுத்தமாக பராமரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தினாலே போதும்… திரையரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருவது அதிகரிக்கும்.
திரையரங்குக்குப் போய் படம் பார்ப்பது ஒரு இனிய அனுபவம் என்ற நிலை அடியோடு மாறிப் போனதுதான் இன்றைய திரைப்படத் தொழில் நசிந்து போனதற்கு முக்கிய காரணம்.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள திரையரங்குகளைக் கண்காணித்து, தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பஞ்சாயத்து அலுவலர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் மாவட்ட அளவில் உள்ள அரசு மக்கள் தொடர்பாளர்களுக்கே உள்ளது. ஆனால் அவர்கள் முற்றாக லஞ்சத்தில் மூழ்கித் திளைப்பதால், என்ன அக்கிரமம் நடந்தாலும் கேட்பாரற்ற நிலை நிலவுகிறது.
தற்போது, இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க மாநில மனித உரிமை ஆணையத்திடமிருந்து சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு ஒரு உத்தரவு வந்துள்ளது.
இதன்படி, துணை ஆணையர் நிலையிலுள்ள அதிகாரி ஒருவரைக் கொண்டு திரையரங்குகளில் நடைபெறும் சுரண்டல்களையும் பகல் கொள்ளைகளையும் விசாரித்து அதன் அடிப்படையில் காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.
குறிப்பாக, திரைப்படம் பார்க்கவரும் ரசிகர்கள் குடிதண்ணீர், நொறுக்குத் தீனி போன்றவற்றை வெளியிலிருந்தோ தங்களது வீட்டிலிருந்தோ கொண்டு வரக்கூடாது என்று தடுப்பதும், பாதுகாப்பு என்ற பெயரில் அவற்றை அரங்குக்குள் நுழையும்போதே சோதித்துப் பறிப்பதும் தனிமனித உரிமை மீறல் என்று மாநில மனித உரிமை ஆணையம் கருதுகிறது.
பல லட்சம் சினிமா ரசிகர்களின் உள்ளக் கிடக்கையையே மனித உரிமை ஆணையம் உத்தரவாகப் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை மாநில அரசு அலட்சியப்படுத்திவிடக் கூடாது… அலட்சியப்படுத்தவும் முடியாது என்பது ஆறுதலளிக்கும் சமாச்சாரம். என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மாநில அரசு.
அன்புடன்
உங்கள்
மாறன்......
கருத்து சொன்னவர்கள் (Recently):