கப்பல்களை கடத்தியிருக்கிறார்கள். இவற்றில் பிணையத்தொகை கொடுத்து மீட்டது போக இன்னும் 17கப்பல்களும், 339 ஊழியர்களும் கடற்கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளனர். சௌதி அராம்கோவின் சியஸ் ஸ்டார் உலகிலேயே மிகப்பெரிய கப்பலாகும். இதில் 100மில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெயும் உள்ளது. இந்தக்கப்பலுக்கு மட்டும் 25மில்லியன் டாலர் பிணையத்தொகையாக அவர்கள் கேட்டுள்ளனர்.
கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் என்று உலகமே அலரத்தொடங்கிவிட்டது. போர்க்கப்பல்களை ஏடன் வளைகுடா பகுதிக்கு அனுப்புமாறு ஐநா சபை தன் உறுப்புநாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவும் தன்னுடைய ஐஎன்எஸ் தாபர் எனும் கப்பலை சுற்றுக்காவல் பணிக்காக அந்தப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. ரஷ்யா உட்பட பல நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளன. கடற்கொள்ளையர்களை அழிக்க உலகம் முழுமூச்சுடன் இறங்கிவிட்டது.
சூயஸ்கால்வாய் தோண்டப்படுவதற்கு முன்புவரை ஐரோப்பிய நாடுகள் இந்தியப்பெருங்கடல் நாடுகளுக்கு வருவதற்கு ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றியே வரவேண்டியதிருந்தது. சூயஸ்கால்வாய் தோண்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததும் செங்கடல் பகுதி கப்பல் போக்குவரத்து மிகுந்த பகுதியானது. இந்தப்பகுதியில் மிக நீண்ட கடல்கரையை கொண்ட நாடு சோமாலியா. மீன்பிடிப்பிலும் அதனைச்சார்ந்த தொழில்களிலும் சிறந்து விளங்கவேண்டிய அளவிற்கு புவியியல் அமைப்பைக்கொண்ட நாடு சோமாலியா. ஆனால் உள்ளூர் மீனவர்கள் கூட மீன் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். காரணம் பன்னாட்டு பகாசுர மீன்பிடிகப்பல்கள் இயந்திரங்களுடனும் தேர்ந்த தொழில்நுட்பத்துடனும் இந்தப்பகுதியையே சல்லடை போட்டு அரித்துவிடுகின்றன. இதை தட்டிக்கேட்பதற்கோ, மீன்பிடி தொழிலை ஊக்கப்படுத்துவதற்கோ நிலையான அரசமைப்பு எதுவும் சோமாலியாவில் இல்லை. அந்தந்தப்பகுதியில் ஆதிக்கம் மிகுந்தவர்கள் தங்களின் பாதுகாப்புக்கென ஆயுதக்குழுக்களை ஏற்படுத்திக்கொண்டு, தங்களின் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக தொடர்ச்சியாக குழு மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியான இந்த சண்டையில் விவசாயமோ வேறு உற்பத்திகளோ இல்லமல் போனது. நிலத்திலுள்ள கனிமங்களோ பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில். அமெரிக்காவும் தன் பங்குக்கு மக்கள் அல்காய்தாவை ஆதரிப்பதாக கூறி (சோமாலிய மக்கள் அனைவரும் இஸ்லாமியர்கள்) யுத்தக்குழுக்களுக்கு ஆயுதம் வழங்கியதுடன் எத்தியோப்பியாவையும் சோமாலிய மீது படையெடுக்கத்தூண்டியது. இவ்வாறு சின்னாபின்னப்படுத்தப்பட்ட சோமாலிய மக்களில் ஒரு பகுதியினர் கடற்கொள்ளையர்களாக உருமாறினார்கள்.
மனிதன் கப்பல்களை கட்டி அதில் பண்ட மாற்றம் செய்யத்தொடங்கிய காலம் முதல் கப்பல்களை கொள்ளையடிப்பதும் கடத்துவதும் வரலாறு நெடுக நடந்துகொண்டுதானுள்ளது. கரீபியக்கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் பிரசித்தி பெற்றது. சிங்கப்பூர் பணக்கார நாடாக இருப்பதற்கு கடற்கொள்ளையில் பெற்ற பணத்தை வர்த்தகத்தில் முதலீடு செய்ததுதான் முதன்மையான காரணம். முன்னாள் கடற்கொள்ளையர்களின் வாரிசுகள் இன்று அங்கே மதிப்புமிக்க முதலாளிகள். கடற்கொள்ளையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி தன் நாட்டில் அவர்களை முதலீடு செய்யவைத்தது அமெரிக்கா. தங்கம் ஏற்றிவந்த ஸ்பெயின் கப்பல்களை கொள்ளையடித்த ஆங்கிலேய கடற்கொள்ளையர்களின் பணம் இங்கிலாந்துக்கு உதவியது(நன்றி: கலையகம்) இப்படி கடற்கள்ளையால் ஆதாயமடைந்த நாடுகள் சோமாலிய கடற்கொள்ளையர்களை ஒழித்துக்கட்ட முழுமூச்சுடன் கிளம்பியிருப்பதற்கு காரணம் என்ன? கடற்கொள்ளையை தடுப்பது தான் நோக்கமா? இல்லை அதன் பின்னே வேறொரு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை ஒன்று உள்ளது.
இந்த இடத்தில் ஒரு விளக்கம் தேவைப்படுகிறது. சௌதி அரேபியக்கப்பல், ஜப்பானியக்கப்பல் என்றால் அந்தந்த நாட்டின் அரசுக்குச்சொந்தமான கப்பல்கள் அல்ல. தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானது தான். ஒருசில பெருமுதலாளிகளுக்கு சொந்தமான கப்பல்களையும் அதிலுள்ள சரக்குகளுகளையும் பாதுகாப்பதற்குத்தான் கப்பற்படை அனுப்பப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் கப்பற்படை, அடித்தட்டு மக்களை காப்பதற்கு பயன்படுத்தப்படாத கப்பற்படை முதலாளிகளின் சொத்தை பாதுகாப்பதற்கு அனுப்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக தமிழக மீனவர்கள் சிங்கள் ராணுவத்தால் தினமும் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள் கடலில். அதை தடுப்பதற்கு வராத இந்திய போர்க்கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து முதலாளிகளின் சொத்தை பாதுகாப்பதற்கு விரைந்து சென்று சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுகிறது. மேலும் கடத்தப்பட்ட கப்பல்களை விடுவிப்பதற்கு கொடுக்கப்படும் பெருந்தொகையையும் அந்த நிறுவனங்கள் விலையை உயர்த்துவதன் மூலம் ஒன்றுக்கு இரண்டு மடங்காக மக்களிடமிருந்து வசூலித்துக்கொள்ளும். பின் கடற்கொள்ளையர்கள் ஒடுக்கப்பட்டாலும் ஏறியவிலை ஏறியது தான் இறங்கப்போவதில்லை. எனவே இந்த கடற்கொள்ளையும் பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்குத்தான் பயன்படப்போகிறது.
2004 டிசம்பரில் ஏற்பட்ட ஓங்கலை(சுனாமி) ஒரு மிகப்பெரிய உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியது. அதுதான் சோமாலிய கடற்கொள்ளைகளை வேட்டையாடக்கிளம்பியதின் பின்னாலும் மறைந்திருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை. பல ஆண்டுகளாக சோமாலியக்கடற்பரப்பில் கொட்டப்பட்டு வந்திருக்கும் நச்சுக்கழிவுகளைத்தான் ஓங்கலை வெளிச்சம் போட்டுக்காட்டியது. சோமாலியக்கடற்பரப்பில் கொட்டப்பட்டுவந்த நச்சுக்கழிவுகள் ஓங்கலையால் கடற்கரையில் குவிந்தன. காரீயம், காட்மியம் போன்ற கழிவுகளும், யுரேனியக்கதிவீச்சுக்கழிவுகளும் மற்றும் மருத்துவ, ரசாயனக்கழிவுகள் என பலவகை நச்சுக்கழிவுகளால் இன்னதென்று தெரியாத புதுப்புது வியாதிகளுக்கும், புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கும் ஆளாகி மாண்டு வருகின்றனர் மக்கள். பல்லாண்டு காலமாக ஏடன் குடாவில் கொட்டப்பட்டுவரும் நச்சுக்கழிவுகளை ஓங்கலை அம்பலப்படுத்தியபோதும் ஊடகங்களில் இந்த விசயம் கவனம் பெறவில்லை. பட்டினிச்சாவுகளின் முதுகுக்குப்பின்னே கொடிய கழிவுகளால் ஏற்பட்ட கோர மரணங்களும் புதைக்கப்பட்டன. இப்போது கப்பல்களுக்கு பெறும் பணையத்தொகை மூலம் சோமாலியக்கடற்கரையை சுத்தப்படுத்தப்போகிறோம் என கடற்கொள்ளையர்கள் அறிவித்திருப்பதால்தான் அது உலகின் கவனத்திற்கு வந்திருக்கிறது. ஏகாதிபத்தியங்களின் இந்த அயோக்கியத்தனத்தை ஓங்கலை அம்பலபடுத்தி நான்காண்டுகளாகியும் இதுபற்றி எதுவும் கூறாமல் ஊமையாய் இருந்த ஐநா சபை தற்போது வேறுவழியில்லாமல் நச்சுக்கழிவுகள் கொட்டப்படுவதை ஒப்புக்கொண்டுள்ளது. இப்போதும் ஆட்கொல்லி நச்சுக்களை கொட்டி மக்களை கொன்ற ஏகதிபத்திய தனியார் நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத்துணியாத ஐநா சபை கடற்கொள்ளையை ஒடுக்குவதற்கு அந்த ஏகாதிபத்திய நாடுகளிடமே போர்க்கப்பல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறது.
1992ல் உலக நாடுகளிடையே ஒரு உடன்பாடு கையெழுத்தானது. பேசல் என்று அழைக்கப்படும் அந்த உடன்பாடு தகுந்த பாதுகாப்பு ஏற்படுகள் இல்லாமல் உலகின் எந்தப்பகுதியிலும் நச்சுக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கிறது. இதை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட யோக்கியசிகாமணி நாடுகள்தான் யாருக்கும் தெரியாமல் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் நச்சுக்கழிவுகளை கடலில் கொட்டிக் கொண்டிருந்திருக்கின்றன. அதே யோக்கியசிகாமணி நாடுகள் தான் வெளிப்பட்டுவிட்ட தங்கள் அயோக்கியத்தனத்தை மறைப்பதற்கு கடற்கொள்ளையர்களை தண்டிக்கத்துடிக்கின்றன. மனித மரணத்திலும் லாபம் பெறத்துடிக்கும் இந்த கொலைகார நிறுவனங்களால்தான் தற்போது நச்சுக்கழிவு ஏற்றுமதி வியாபாரம் சக்கைபோடு போடுகிறது. இதற்காகத்தொடங்கப்பட்ட நிறுவனங்கள் பணக்கார நாடுகளிடமிருந்து கழிவுகளை இறக்குமதி செய்து ஏழை நாடுகளின் விவசாயிகளை விலைபேசி அவர்களின் விளைநிலங்களில் புதைத்துவருகின்றன. சோமாலியா மட்டுமில்லாமல் நைஜீரியா, கினியா, பிசாவ், ஜீபொடி, செனகல் போன்ற நாடுகளிலும் கொட்டப்படுகின்றன. இந்தியாவிலும் கூட காகித ஆலைக்கழிவுகள் என்ற பெயரில் இக்கழிவுகள் நிலங்களில் புதைக்கப்படுகின்றன. (அண்மையில் அணுஆற்றலில் இயங்கும் நிமிட்ஸ் கப்பல் சென்னைக்கு துணை நடிகைகளை விசாரித்துச்செல்வதற்குத்தான் வந்தது என்று நம்புகிறீர்களா?) கதிர்வீச்சு வெளிப்படாமல் புதைப்பதற்கு ஒரு டன்னுக்கு ஆயிரம் டாலர் செலவு பிடிக்குமென்றால், ஏழை நாடுகளின் கடல்களிலும், நிலங்களிலும் புதைப்பதற்கு இரண்டரை டாலர்தான் செலவு பிடிக்கும். லாபம்தானே முக்கியம். ஏழை மக்களின் உயிர் முக்கியமானதா என்ன?
மறுபக்கம், இந்த கடற்கொள்ளையர்கள் மெய்யாகவே நச்சுக்கழிவுகளை சுத்தப்படுத்துவதற்காகத்தான் கப்பல்களை கடத்துகிறார்களா? சாவின் விளிம்பிலுள்ள சொந்த நாட்டு மக்களை காப்பதற்கு ஐநா அனுப்பிய உணவு, நிவாரணப் பொருட்களைக்கூட கொள்ளையடித்துச்சென்றவர்கள் தான் இவர்கள். தம்முடைய முழு ஆதிக்கத்திற்காக சண்டையிட்டுக்கொள்ளும் இவர்களிடம் கழிவுகளை அகற்றுவதற்கான திட்டமோ அமைப்புகளோ இல்லை. பட்டினியால் செதுக்கொண்டிருக்கும் சொந்தமக்களின் சாவைக்குறித்த தெளிவான பார்வை இல்லை. நாட்டின் நிலமை, அதற்கான காரணங்கள், அதை தீர்க்கும் செயல் முறைகள் என எதுவுமின்றி மக்களைத்திரட்டாமல், போராட்டத்தை முன்னெடுக்காமல் சில கப்பல்களை கடத்துவதால் எதுவும் விளைந்துவிடப்போவதில்லை.
நச்சுக்கழிவு கொட்டுதல், உலகம் வெப்பமயமாதல், தண்ணீர்க்கொள்ளை, சூழலை மாசுபடுத்துதல், விண்வெளிக்குப்பைகள் என்று ஏகாதிபத்திய நிறுவனங்கள் உலக மக்கள் மீது திணிக்கும் பிரச்சனைகள் பலப்பல. இவைகள் ஏதாவது ஒரு தனி நாட்டுடன் தொடர்புள்ளதென்றோ, சிலபிரிவு மக்களுக்கான பிரச்சனை என்றோ ஒதுக்கிவிடமுடியாது. இவைகளை உணர்ந்து மையப்படுத்தப்பட்ட போராட்டத்தை தொடங்காதவரை ஏழை நாடுகளையும் அதன் மக்களையும் ஏகாதிபத்தியங்கள் கொன்று குவித்துக்கொண்டேயிருக்கும்.மறக்காம உங்கள் கருத்துக்களை அனுப்புங்க.....
அன்புடன்
உங்கள்
மாறன்...
www.maran.co.nr
3 comments:
மிகவும் பயனுள்ள பதிவு
a neutral post.. thanks
I'm really enjoying the theme/design of your weblog.
Do you ever run into any internet browser compatibility
issues? A couple of my blog audience have complained about my blog
not operating correctly in Explorer but looks great in Opera.
Do you have any suggestions to help fix this issue?
Feel free to surf to my web blog :: minecraft.net
Post a Comment
மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...