-ஏ.கே.கான்
போக்ரான்...
அப்துல் கலாம் தனது விஞ்ஞானிகள் குழுவுடன் தீவிர ஆலோசனையில் இருக்க அங்கு வருகிறார் இந்திய அணு சக்திக் கழகத்தி்ன் தலைவர் டாக்டர் ஆர். சிதம்பரம்.
'கலோனல் பிருத்விராஜ்'... என சிதம்ரம் அழைக்க, கலாம் திரும்பிப் பார்க்கவி்ல்லை.. யாரையோ கூப்பிடுகிறார் என நினைத்து தனது 'ஸ்கெட்களில்' ஆழ்ந்திருக்கிறார்.
மீண்டும் 'கலோனல் பிருத்விராஜ்' என சிதம்பரம் அழைக்க, கலாம் சட்டென திரும்பி ''ஆமா.. அது நான் தான் இல்ல, சொல்லுங்க கலோனல் நட்ராஜ்'' என்கிறார் சிதம்பரத்திடம்.
அணு குண்டு சோதனையை
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுத்தி தொடங்கியது இந்த பெயர்கள் மாற்றத்தில் இருந்து தான்.
இந்த முழு சோதனையையும் மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம்-சிதம்பரம்- இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர் கே.சந்தானம்- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அனில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர்களை சூட்டிக் கொண்டனர்.
அந்த வகையில் பிருத்வி ஏவுகணையின் பெயரை சேர்த்து கலாமுக்கு பிருத்விராஜ் என பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு நட்ராஜ் என பெயரிட்டார் கலாம். அதே போல சந்தானம், 'கலோனல் சீனிவாசன்' ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக 'மாமாஜி' என பெயர் சூட்டினர்.
பாலைவனப் பகுதியில் தாங்கள் நடத்தப் போகும் அணு குண்டு சோதனைக்கு 'சக்தி' என பெயர் சூட்டினர்.
இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது உளவாளிகள் கொண்டும் தொடர்ந்து கண்காணித்து வரும் நாடுகள், தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் நாடுகளுக்கு இந்த 'கலோனல்கள்' போக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துகிறார்கள் என்று தான் தோன்றியிருக்க வேண்டும்.
கலாம்-ஆர்.சிதம்பரம்- ககோட்கர்- சந்தானம் ஆகியோர் போக்ரான் பக்கம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியானால், சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசிய திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம்.
மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்து தான் அந்தப் பகுதியில் நடமாடினர்.
ஏப்ரல் 10ம் தேதி தான் இந்த டீமை அழைத்து குண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான்.
சட்டென களத்தில் குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உருவாக்கினர். ராணுவத்தின் Corps of Engineers பிரிவில் இருந்து 1,000 வீரர்களை தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடைகள் தான்.
அடுத்ததாக கலாம் அமெரி்க்க உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை (satellite hours) வைத்து ஒரு 'டைம் டேபிள்' போட்டார். இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம்.. இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலை காட்டக் கூடாது.. இந்த நேரத்தில் தான் அணுக் கருவிகள் தாங்கிய ராணுவ வாகனம் புறப்பட வேண்டும்.. இந்த நிமிடத்தில் தான் அது போக்ரானுக்குள் நுழைய வேண்டும்..
அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள், மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. என பல்வேறு உளவு-ராணுவ யுத்திகளை ஒருங்கிணைத்தார் கலாம்.
கலாமின் இந்த டைம் டேபிளின்படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். இதனால் இந்தியாவின் அணு குண்டு சோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன.
கிட்டத்தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள்.. மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு.. மே 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம், 'நாங்க ரெடி'..
வாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் எந்த நேரத்திலும் சோதனையை நடத்தலாம் என சுதந்திர தர, மே 11ம் தேதி பிற்பகலில் ஜெய்சால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து 3 முறை குலுங்கியது.
உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெக்கார்ட் செய்ய, உலக நாடுகள் முழுவதும் தெர்மோ நியூக்ளியார் ஷாக்...!. இந்தியா சோதனையிட்டது அணு இணைப்பு (fission) மூலம் வெடிக்கும் 'தெர்மோ-நியூக்ளியார்' பாம்.
இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு.
அடுத்த 30 நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.. ''இனி நாமும் அணு ஆயுத நாடு தான், இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி''.
இந்த சோதனை மூலம் இந்தியா 3 முக்கிய தகவல்களை 'அணு' உலகுக்கு சொன்னது. 1. யுரேனியத்திலிருந்து புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம். 2. இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான். 3. ஹெவி வாட்டரி்ல் இருந்து டிரிடியத்தை பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரியும்.
(அணுக்கள் இணைப்பு மூலமாக செயல்படும் அணு குண்டுகளில் முக்கிய பங்கு வகிப்பது tritium. இது ஒரு isotope.. அதற்குள் ரொம்ப போக வேண்டாம்.. அப்புறம் Element, Mass, Nuclei, Neutron என நாம் 'சண்டை' போட வேண்டி வரும்)
இந்த குண்டு, அணு ஆராய்ச்சி குறித்து இந்தியா மீதான பார்வையை மாற்றியது.. தடைகள் போட்டு என்ன சாதித்தோம்.. இந்தத் தடைகளால் என்ன பயன் ஏற்பட்டுவிட்டது? என விவாதத்தி்ல் இறங்கின நாடுகள்.. குறிப்பாக அமெரிக்கா!
ஆனால், அந்த விவாதங்களாலும் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை. மேலும் தடைகளைத் தான் போட்டார்களே தவிர உருப்படியாய் ஏதும் நடக்கவில்லை.
இந் நிலையில் தான் வந்தது செப்டம்பர் 11 தாக்குதல். உலக நாடுகள் குறித்த அமெரிக்காவின் ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றிய தினம் அது. நம் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என அமெரிக்காவை சிந்திக்க வைத்த தினம்.
தீவிரவாதம் குறித்த அதன் பார்வை மாறிய தினம்.
அதுவரையில் தீவிரவாதம் என்றால், தாக்குதல் நடந்த நாட்டில் உள்ள தனது தூதரகம் மூலம் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுவிட்டு அமைதியாகிவிடுவதே அமெரிக்காவின் ஸ்டைல் ஆக இருந்தது.
தீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தியா, அது குறித்து கொடுத்த அபாயக் குரல் அதுவரை அமெரிக்காவின் காதுகளை எட்டியதே இல்லை.
இந் நிலையில் நியூயார்க் தாக்குதல், அந் நாட்டின் 'strategic planners'-களை சில குறிப்பிட்ட நாடுகள் பக்கமாய் திருப்பியது. எதிர்கால உலகின் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிக்கப் போகும் நாடாக, இந்தியாவைப் பார்த்தது அமெரிக்கா.
இந்தியாவை நாம் ஏன் இத்தனை காலம் புறக்கணித்தோம் என அமெரிக்காவை வருத்தத்திலும் ஆழ்த்தியது. அடுத்து வந்தது தான் 'சடசட' மாற்றங்கள்.
இந்தியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சிகள், இந்திய விமானப் படையுடன் கூட்டு பயிற்சி என நெருங்கி வந்தது அமெரிக்கா. இந்தியாவுக்கு எப்-16 ரக விமானங்களைத் தரவும் முன் வந்தது.
இந்திய-அமெரிக்க உறவில் இப்படியோடு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்-அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் டால்போட் ஆகியோர் நடத்திய 'மாராதான்' பேச்சுவார்த்தைகள் தான்.
இருவரும் மாறி மாறி அமெரிக்கா, இந்தியாவுக்கு பயணித்து பல சுற்றுப் பேச்சு நடத்தினர். இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட சந்தேகங்களை (ஓரளவுக்காவது) போக்கிக் கொண்டதும் அந்த சந்தர்ப்பங்களில் தான்.
ஜஸ்வந்த் சிங்கை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே வந்து காலை 'ஜாகிங்' செய்ய கூட்டிச் செல்லும் அளவுக்கு நெருக்கமானார் டால்போட். கிட்டத்தட்ட 9 முறை இருவரும் அதிகாரிகள் மட்டத்திலும் தனியாகவும் பேச்சு நடத்தி பல துறைகளிலும் இரு நாடுகளை பிரித்து 'சுவர்களை' படிப்படியாக இடித்தனர்.
இதற்கு அதிபர் கிளின்டன்- பிரதமர் வாஜ்பாயின் முழு ஆதரவும் கிடைக்கவே, நிஜமாகவே நல்லுறவு பிறந்தது.
அணு சக்தி ஆராய்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்ற விஷயத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதும் அப்போது தான்.
Comprehensive test ban treaty (CTBT)-ல் (இனிமேல் அணு குண்டு சோதனை நடத்துவதில்லை என்ற ஒப்பந்தத்தில்) மட்டும் கையெழுத்து போடு்ங்கள், நாங்களும் உங்களை NPT-ல் (Nuclear Non-Proliferation Treaty- அணு ஆயுத பரவல் தடை சட்டம்) கையெழுத்து போடுமாறு இனியும் நிர்பந்திக்க மாட்டோம் என இறங்கி வந்தது அமெரிக்கா.
NPT விஷயத்தில் அமெரிக்காவின் சிந்தனை மாற்றத்தின் மூலம் இந்தியா அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிலை மாறியது.
ஆனாலும், CTBTயில் கையெழுத்திட முடியாது என இந்தியா மறுத்துவிட்டது. எங்கள் நாடு எப்போதும் அநாவசியமான அணு குண்டு சோதனைகள் நடத்தியதில்லை. எனவே, அதில் கையெழுத்திட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது இந்தியா.
அதே போல அணு ஆயுத பரவல் தடை சட்டம் (NPT) இந்தியாவுக்கு பொறுந்தவே பொறுந்தாது. நாங்கள் ஒரு பொறுப்பான தேசம் என்பதை எப்போதும் நிரூபித்து வந்திருக்கிறோம்.. யாருக்கும் எங்கள் தொழில்நுட்பத்தை விற்றதில்லை, எனவே எங்களை அதில் கையெழுத்திடச் சொல்வது சரியல்ல என விளக்கியது இந்தியா.
இந்தியாவின் நியாயங்கள் அமெரிக்காவுக்கு புரிய ஆரம்பித்த நிலையில் ஆட்சி மாற்றம். வந்தார் மன்மோகன் சி்ங். அமெரிக்கா-மேலைநாடுகளின் 'மார்க்கெட் எகானமி' மாடல் தான் நம் நாட்டை வறுமையிலிருந்து மீட்க உதவும் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டவர் சிங்.
சோசலிஷ-கம்யூனிஸ பொருளாதார கொள்கைகளால் பயனில்லை என்பவர். 1990களில் அவர் ஆரம்பித்த economic restructuring எனப்படும் பொருளாதார சீ்ர்திருத்தங்களின் பலனைத்தான் இந்தியா இப்போது அனுபவித்து வருகிறது (கடந்த 4 மாத 'சோகக் கதையை' மறந்துவிட்டுப் பார்த்தால்).
சந்திரசேகர் பிரதமராக இருந்தோது பெட்ரோலியம் (ஆஹா, பெட்ரோலா!!) வாங்க அன்னிய செலாவணி கூட இல்லாமல் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்து அங்கு வங்கியில் அடமானம் வைத்தவர்கள் தான் நாம்.
ஆனால், இன்று நம்மிடம் 312.5 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பு. இன்று நாம் பார்க்கும் தகவல் தொடர்பு புரட்சி, தகவல் தொழில்நுட்ப சாதனைகள், தனியார் பங்களிப்புடன் 8 லேன் நெடுஞ்சாலைகள்.. என எல்லாம் சாத்தியமானது இந்த புதிய பொருளாதாரக் கொள்கைகளால் தான்.
'ரெட் டேப்' சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து நம்மை 'மீட்டு' (இடதுசாரிகள் 'மாட்டி' விட்டது என்பார்கள்) மார்க்கெட் பொருளாதாரம் பக்கமாய் திருப்பிவிட்டது மன்மோகன் சிங் தான்.
இதனால் இயல்பாகவே அமெரிக்காவுக்கு சிங் மீது அதீத மரியாதை உண்டு. தன் மீதான அமெரிக்காவின் இந்த நம்பிக்கையை அப்படியே நாட்டின் நலனுக்காக முழுமையாய் பயன்படுத்த நினைத்த மன்மோகன், அணு சக்தி விவகாரத்தில் கையை விட்டார்...
தொடரும்..
(கட்டுரையாளர் thats thamil ஆசிரியர்)